தமிழ்நாடு

வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை நியாயமானது - அமைச்சர் உதயக்குமார்

webteam

மதுரையை 2 ஆம் தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 14 மாவட்ட வர்த்தகர்கள் பங்கேற்றுள்ள கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “மதுரையை 2ம் தலைநகராக்க இப்பொழுதுதான் ஞானம் பிறந்ததா என மக்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கான தேவை தற்போது அவசியமாகிறது. மக்கள் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பது அரசின் மரபாக உள்ளது.

மதுரையை 2வது தலைநகராக்க வேண்டும் என்பது புதிய கோரிக்கை அல்ல. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. மதுரைக்கு 2ம் தலைநகராக தகுதி உள்ளதா இல்லையா என்பதை விவாதிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இட நெருக்கடி போன்ற காரணங்களினால் மதுரை 2ம் தலைநகராக வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தற்போது புதிய தொழிற்சாலை துவங்க வேண்டும் என்றால் கூட சென்னையில் இட வசதி இல்லாமல் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

மதுரையை 2ம் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த உள் நோக்கமும் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் கொரோனோ காலத்தில் அதிக மாவட்டத்திற்கு சென்று மக்களை சந்தித்து மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரே முதல்வர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என சவால் விட்டு தெரிவிக்க முடியும். இவர் நிலைப்பாரா என தெரிவித்தவர்கள் இன்று சபாஷ் எடப்பட்டியார் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கையை முன்வைக்கும் போது எத்தனை சாயங்கல் பூசப்படும், விமர்சனம் முன்வைக்கப்படும் என்பது தெரிந்துதான் கோரிக்கையை முன் வைத்துள்ளேன். திருச்சியை 2ம் தலைநகராக வேண்டும் என்ற அமைச்சர் வெல்லாமண்டி நடராஜன் கோரிக்கை நியாயமானது. அவருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. திருச்சியா? மதுரையா என திசை திருப்பி சிக்கலாக்கி விட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.