அமைச்சர் வன்னி அரசு pt
தமிழ்நாடு

”ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம்..” அமைச்சர் வன்னி அரசு!

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

Rishan Vengai

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மர்ம கும்பல் நடத்திய வன்முறை தாக்குதலால் பலர் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு, ஆணவக் கொலைகளைத் தடுக்க வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே தெற்குப்பட்டி மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதிகளில் சாலையில் சென்றவர்கள் மற்றும் திருமண வீட்டில் இருந்தவர்களை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடமும் கேட்டறிந்தார்.

அமைச்சர் வன்னி அரசு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தனிச்சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களை வன்கொடுமை பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை. முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். வன்கொடுமை பாதிப்புகளைத் தடுக்க தனிப்படை அமைப்பது குறித்தும் முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.