சமுதாயத்தில் பிரபலமான ஒருவர் மீது புகார் அளிக்கும் போது தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் #MeToo பிரசாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் #MeToo பிரசாரம் குறித்து அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் metoo பிரச்சினை குறித்து பேசினார்
அதில் பெண்கள் புகார் அளிக்கும்போது தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும். பிரபலங்களின் மீது ஆதாரத்துடன் புகார் அளித்தால்தான் அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும். பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது இந்தச் சமூக வலைத்தள புரட்சியை பயன்படுத்தி வருகிறார்கள். இது மக்களின் பார்வைக்கும் எளிதில் செல்கிறது. ஆனாலும் சமுதாயத்தில் பிரபலமான ஒருவர் மீது புகார் அளிக்கும் போது தகுந்த ஆதாரத்துடன் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.