தமிழ்நாடு

‘வாட்ஸ் அப் உலகத்தில் உண்மையைவிட பொய் செய்தி அதிகமாக பரவுகிறது’ - அமைச்சர் உதயநிதி!

PT WEB

“வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதைப் பொருட்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் 2 விதங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஒருபக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொருபுறம் போதைப்பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அந்த நேரத்தில்தான் குறும்படங்கள் போட்டி நடத்துவது குறித்த ஆலோசனை வந்தது. எத்தனை நபர்கள் இதில் பங்கேற்பார்கள் என சந்தேகம் இருந்தது. இருந்தாலும் குறைந்த நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பு செய்யபடும். நிச்சயம் போதைப்பொருட்களை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நிறைய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபெருக்கி மூலம் போடப்படுகின்ற நேரத்தில், யாரும் பாடாமல் இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுச்சியோடு பாடினார்கள். அனைத்து நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நேரத்தில் மாணவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது எங்கும் வாட்ஸ் அப் உலகமாக உள்ளது. அதில் வரும் செய்தி உண்மையா, பொய்யா என தெரியாமல் அதனை பகிர்ந்து வருகிறோம். எனவே மாணவர்கள் உண்மையான செய்தி எது, பொய் எது என்பதை அறிந்துகொள்ள பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உண்மை செய்தி செல்ல அதிக நேரம் எடுக்கும் நேரத்தில், பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள ட்வீட்டில், “போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்! போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோர்த்திடுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.