உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் PT Web
தமிழ்நாடு

“அதிமுக பாஜக இடையே மோதல் இல்லை; உட்கட்சிப் பிரச்னை” அமைச்சர் உதயநிதி விமர்சனம்

PT WEB

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் விவாதப்பொருளானது. மத்திய அமைச்சர்கள் பலரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகந்நாத் மனுத்தாக்கலும் செய்திருந்தார். அதில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும், அந்த மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம். திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஏன் உயர்நீதிமன்றத்தை நாடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் எங்களை காவல்நிலையமாக மாற்றுகிறீர்களா? உங்கள் கோரிக்கைதான் என்ன? சம்பந்தப்பட்ட நபர்கள் பேசியது என்ன எனவும் வினவினர்.

சனாதனத்துக்கு எதிராகப் பேசியது சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதாகவும், இதில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த அமைப்பினர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

அதிமுக-பாஜக கூட்டணி மோதல்; அமைச்சர் உதயநிதி கருத்து

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சனாதனத்தை விடுத்து இப்போது 7.5 லட்சம் கோடியைப் பற்றி பேசிக்கொண்டுள்ளோம். உச்சநீதிமன்றம் பதிலளிக்க வேண்டும் என்று சொன்ன நோட்டீஸ் இன்னும் வரவில்லை. தொலைக்காட்சி செய்தித்தாள்களில்தான் நான் பார்த்தேன். நோட்டீஸ் வந்ததும் தகுந்த பதில் கொடுப்போம். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

எப்போதும் மக்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளேன். இன்றுதான் சென்னைக்கு வந்தேன். நேற்றெல்லாம் மதுரையில் இருந்தேன். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். குறிப்பாக மகளிருக்கு 1000 ரூபாய் திட்டம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாஜக அதிமுகவிற்கும் இடையே மோதலே இல்லை. அது காமெடி டைம். மோதல் அல்ல, உட்கட்சிப் பிரச்னை” என்றார்.