விஜய், உதயநிதி ஸ்டாலின் PT Web
தமிழ்நாடு

“நல்லதுதானே சொல்லியிருக்கிறார்” - நடிகர் விஜய் கருத்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்!

”அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்” என நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

PT WEB

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதி மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விஜய்

இந்த நிகழ்வு இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அவர், “ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உங்கள் அம்மா, அப்பாவிடம் சென்று ’இனிமே காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க’ எனச் சொல்லுங்கள்” என தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது.

இதுகுறித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அவர் (விஜய்) பேசியதை நான் பார்க்கவில்லை. நான் தொகுதியில் இருக்கிறேன்” என்றவர், பிறகு ”நல்லதுதானே சொல்லியிருக்கிறார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; யார் வரவேண்டும் யார் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எல்லோருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது” என்றார், சிரித்தபடியே.

நடிகர் விஜய் குறித்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, வீடியோ வடிவில், செய்தியின் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்.