தமிழ்நாடு

“அதுபோல இனி உலகத்தில் எங்கும் நடைபெறக் கூடாது”- அமைச்சர் உதயகுமார்

webteam

சாத்தான்குளம் சம்பவம்போல் இனி உலகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருந்தே இல்லையென்றாலும் கொரோனாவைத் தடுக்க போராடி வருகிறோம். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம்.

சாத்தான்குளம் சம்பவம் வருந்தத்தக்கது. வேதனையானது. அந்தச்சம்பவம் போல் இனி உலகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது. சிபிஐ விசாரணை விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுகிறது. எதற்கெடுத்தாலும் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. சிபிஐ விசாரணைதான் தேவை என திமுக தான் கூறியுள்ளது. ஆனால் தற்போது சிபிஐ விசாரணை தேவையில்லை என திமுக கூறுவது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்