தமிழ்நாடு

இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை, மீட்புக்குழு தயாராக உள்ளது: உதயகுமார்

இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை, மீட்புக்குழு தயாராக உள்ளது: உதயகுமார்

webteam

சென்னையில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெய்து வரும் கனமழை தொடர்பாக எழிலகத்தில் இருந்த அமைச்சர் உதயகுமாரிடம், புதிய தலைமுறை செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த அவர், “கனமழை பாதிப்பு தொடர்பாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இரவிலும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவுப்படி, மழை பாதிப்பு புகார் குறித்த கட்டுப்பாட்டு அறையும் இரவு முழுவதும் செயல்படவுள்ளது. மக்களின் குறைகளை அறிந்து, அவற்றை உரிய துறைகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தற்போது கட்டுப்பாட்டு அறைகளில் நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையை கட்டுபாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அத்துடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற, மழைபாதிப்பு மீட்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறைகளின் கீழ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் தலைமையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அத்துடன் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையின் மூலம் அனைத்து ஏரிகளின் நீர் இருப்பும் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.