தமிழ்நாடு

’கஜா’ புயலால் மின்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி

’கஜா’ புயலால் மின்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு - அமைச்சர் தங்கமணி

webteam

’கஜா’ புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
தெரிவித்துள்ளார்.

’கஜா’ புயல் நேற்று முன் தினம் இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
தஞ்சை, கடலூர், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும்
சேதம் அடைந்தன. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து
வருகின்றனர்.  

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.  

இதனிடையே கஜா புயல் சேதம் குறித்து முதற்கட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் முழுவதுமாக சேத
மதிப்பீடு கண்டறிந்த பின்பே மத்திய அரசுக்கு அதனை அனுப்பி நிவாரணம் பெற முடியும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ’கஜா’ புயலால் மின் துறைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நகர்புறங்களுக்கு இணையாக
கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு தர விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
தெரிவித்துள்ளார்.