தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் டிஜிட்டல் மின் மீட்டர்களுக்கு மாற்றாக ஸ்மார்ட் மீட்டரை பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சென்னை தியாகராய நகரில் ஸ்மார்ட் மின் மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஸ்மார்ட் மீட்டரில் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, அதற்கான கட்டண விவரங்கள் நுகர்வோரின் செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. ஆனால் நாம் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை ஸ்மார்ட் மீட்டரில் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கின்றனர், நுகர்வோர்கள். ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்துவது போன்ற சிரமங்களையும் நுகர்வோர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதுதொடர்பாக விரிவாக நேரலையில் பதிவு செய்தநிலையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டபின், மாதந்தோறும் மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒன்பது மாவட்டங்களில் உள்ள 80 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் என்பது மென்பொருள் மூலம் இயங்கவுள்ளது. ஆகையால் வெளிநாட்டில் இருந்து ஹேக் செய்தால் மின்சார துண்டிப்பு போன்ற விபரீத விளைவுகளும் ஏற்படலாம் என தொழில் நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனினும் மின்சாரத் திருட்டை தடுத்தல், துல்லியமாக மின்சாரத்தை கணக்கிடுதல், மின்சார பயன்பாட்டை ஒரே இடத்தில் இருந்து கணக்கிடுதல் போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகளாகப் பட்டியலிடுகின்றனர்.