தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாக பூஜை நடத்துமாறு, அதிமுகவின் 53 மாவட்டச் செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி அதிமுகவினரும் யாகங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வேலூர் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என திமுகவை சேர்ந்த துரைமுருகன் விமர்சித்திருந்தார். மேலும் தண்ணீர் பிரச்னைக்காக இன்று ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும் தண்ணீர் பற்றாக்குறைதான் நிலவுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக தண்ணீர் பிரச்னைக்காக போராட்டங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
வேலூர் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.