செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூரில் திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர் பேசிய போது....
“தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு மக்களை நோக்கி வருவதற்கு ராமதாஸ் துடித்துக் கொண்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்புதான் இந்த 10.5 சதவீதம் பிரச்னையை கையில் எடுத்து போராட்டம் செய்தார். தேர்தல் அறிவிக்கும் அன்று காலையில் சட்டமன்றத்தில் அறிவித்தனர். தரவுகள், ஆதாரங்கள் இல்லாததால் அது செல்லாது என நீதிபதி தெரிவித்தார்.
இட ஒதுக்கீட்டை பார்த்து பார்த்து செய்து கொடுத்தவர் கலைஞர்:
டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்களுடைய டாக்டர் வேலையை பாருங்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை பார்த்து பார்த்து செய்து கொடுத்தவர் கலைஞர். அவருக்கு தெரியாதது உங்களுக்கு எதுவும் தெரிந்துவிடப் போவதில்லை. தற்பொழுது முதல்வர் செய்யும் சாதனைகளை பார்த்து மற்ற மாநிலங்கள் அவற்றை நிறைவேற்றி வருகின்றன. என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் அறிவார். அதை செய்து கொண்டிருக்கிறார். செய்வார்.
முதல்வர் யார், அவருடைய தரம் என்ன என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும்:
முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் யார், அவருடைய தரம் என்ன என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். இவரை பார்த்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்தியாவை ஆட்டிக் கொண்டிருக்கும் மோடியை, அமிர்ஷாவை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின்.
கொள்கை ரீதியாக, சித்தார்தம் ரீதியாக எதிர்க்கிறோம் என்று துணிச்சலாக நின்று பேசியவர் எங்கள் முதல்வர். திராவிட முன்னேற்ற கழகத்தை எச்சரிக்கின்ற வேலை எல்லாம் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று பேசினார்.
முன்னதாக நேற்றைய தினம் அதானி விவகாரம் குறித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்விக்கு, “அதானி விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே உரிய முறையில் பதில் அளித்துள்ளார். அவருக்கு (ராமதாஸ்) வேறு வேலை இல்லை. ஏதாவது ஒரு அறிக்கை நாள்தோறும் விடுக்கிறார். எனவே பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.