பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூல் செய்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது 'புதிய தலைமுறை'யின் கள ஆய்வில் தெரிய வந்தது. ஆறாம் வகுப்பு மாணவர்களை சேர்க்க 550 ரூபாயும், 9 ஆம் வகுப்பில் சேர்க்க 750 ரூபாயும், 11ஆம் வகுப்பில் சேர்க்க 1,250 ரூபாயும் வசூலிக்கப்பட்டது அம்பலமானது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பெரம்பலூர் சென்றிருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரிடம் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.