அதானி, செந்தில்பாலாஜி, ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

மின் விநியோக ஒப்பந்தம்: “முதல்வர் அதானியைச் சந்திக்கவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்

”முதல்வர் ஸ்டாலின், அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, தொழிலதிபர் கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தது. அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் ஆந்திரா மற்றும் தமிழக அரசுகளின் பெயரும் பகிரங்கமாக அடிபட்டது.

இதுதொடர்பாக ஆந்திராவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், அதானி நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தொகைக்கு மின்சாரம் பெறுவதற்காக, தமிழக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “தொழிலதிபர் அதானியை தமிழ்நாடு முதல்வர் சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன. இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர், அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. அதிமுக ஆட்சியில் சீர்குலைந்து போன மின்சார வாரியத்தை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி, அடிப்படை உண்மை இல்லாத பொய்க்குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடல்ல. இதுபோன்ற பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள்மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.