செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி - காரணம் இதுதான்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது மருத்துவ காரணங்களை முன்னிறுத்தி பிணை தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, “செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் கூட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே மருத்துவப்பிணை மட்டுமே கோருகிறோம். இவருக்கு கடந்த 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனை மூலம் எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது” என்று வாதிட்டார்.

வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், “செந்தில் பாலாஜிக்கு தேவையான பரிசோதனைகள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது. ‘இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே சிகிச்சை தேவை’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவ தரவுகளின் அடிப்படையில் அத்தகைய சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை. எனவே பிணை கேட்டு அளித்த மனுவை திரும்பப்பெற வேண்டும். மேலும் இந்த மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.

இதனை ஏற்ற செந்தில் பாலஜியின் தரப்பு இம்மனுவை திரும்ப பெறுகின்றனர். இருப்பினும் ஏற்கெனவே இம்மனு கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு நிராகரிக்கப்பட்ட பின்னரே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.