தமிழ்நாடு

‘ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் இலவசம்’-செந்தில் பாலாஜி

webteam

ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும், அவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக தடை இன்றி வழங்கப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம் பகுதி 63-வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தையல் இயந்திரம், கிரைண்டர், மிக்ஸி, எரிவாயு அடுப்பு, சில்வர் பாத்திரம் மற்றும் சிறுவர்களுக்கு மிதிவண்டி என 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சுமார் 80 சதவிகித வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளதாகவும், குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரருக்கு தலா 4000 ரூபாய் வழங்கியது, பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகள் உள்ளதாகவும், அதில் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்கள் உடன் இணைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், மற்ற மின் இணைப்புகளும் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு விடும் என்றும், மின்சார வாரியத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்து இருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், சென்னை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, சேப்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் மதன்மோகன், 63வது வட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்