பொள்ளாச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சி, வால்பாறை, மற்றும் பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது கோவை மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் அதற்காக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியில் வரும்போது திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுகவினர் ஆத்திரமடைந்து அமைச்சரை வெளியில் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டதாக தெரிகிறது. இதனால் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட அமைச்சரை கூட்டத்தில் இருந்து வெளியில் அழைத்து வர முடியாமல் நிர்வாகிகள் திணறினர். பின்னர் ஒரு வழியாக நுழைவாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அமைச்சர் காரில் ஏறினார்.
ஆனால் காரை வழிமறித்து ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக அங்கிருந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டதால் அமைச்சரின் கார் கூட்டத்திற்குள் ஊர்ந்து ஒருவழியாக பிரதான சாலைக்கு சென்று அடைந்தது. அமைச்சர் காரை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.