செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி pt web
தமிழ்நாடு

3வது முறையும் தள்ளுபடி; செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

Prakash J

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் அமைச்சர் (இலாகா இல்லாத) செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இதயத்தில் அடைப்பு இருப்பதாக செந்தில் பாலாஜி கூறப்பட்ட நிலையில், அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. ஒருமாத கால ஓய்வுக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், இவ்வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இதையடுத்து, 3வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 180 நாள்களுக்கும் மேலாக அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜனவரி 8க்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இதையும் படிக்க: காதலில் விழுந்த புருனே இளவரசர்.. மன்னர் வம்சாவளி அல்லாத பெண்ணை கரம் பிடித்து ஒரேநாளில் வைரல்!

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், அமலாக்கத்துறை சாா்பில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது எனக் கூறி வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, வழக்கின் தீா்ப்பு ஜனவர் 12ஆம் தேதி (இன்று) வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

செந்தில் பாலாஜி

இந்த நிலையில், இன்று, மூன்றாவது முறையாக செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 15வது முறையாக ஜனவரி 22 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐலைனர் மூலம் 6 வரிகளில் கடிதம்.. டிரைவர் சொன்ன சீக்ரெட்.. சிஇஓ மகனின் கொலையில் வெளியான புதுதகவல்!