தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்ரமணி எழுப்பி கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நூலகங்களில் ஒரு மாதத்திற்குள் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள நூலகங்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் துணை கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், உள்ளாட்சித்துறையிடமிருந்து உரிய நிதி பெற்று, பராமரிப்பின்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் என்றார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் நூலகங்களில் வைப்பதற்கு நூல்களை வழங்க வேண்டும் எனவும் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார்.