தமிழ்நாடு

வடசென்னையில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி

Sinekadhara

வடசென்னை அனல் மின்நிலையத்தில் பதிவேட்டில் உள்ள இரண்டு லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ததில், இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாகவும், தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

வெளிப்படையான நிர்வாகத்தை மின்வாரியம் முன்னெடுத்துள்ளதாகவும், கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். மின்கட்டணம் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.