தமிழ்நாடு

“வெங்காயத்தை யார் பதுக்கினாலும் தப்ப முடியாது” - செல்லூர் ராஜூ எச்சரிக்கை

“வெங்காயத்தை யார் பதுக்கினாலும் தப்ப முடியாது” - செல்லூர் ராஜூ எச்சரிக்கை

webteam

வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

வெங்காயத்தின் விலை மீண்டும் கடும் உயர்வை சந்தித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 96 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்றம், இறக்கம் கண்டே வருகிறது. 

வெங்காய உற்பத்தியில் முன்னணி வகிக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்ததே பெரிய வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். உள் மாவட்டங்களில் அதிகளவு விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் பதுக்கல் காரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என தெரிவித்துள்ளார்.