சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி திருக்கோயிலில் இருந்து தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 2 ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்மீகவாதிகளின் பொற்காலமாக இந்த ஆட்சி உள்ளது. மண்டல பூஜைக்கும் மகர தீபத்திற்கும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மலர் பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து 40 ஆண்டுகள் சபரிமலை சென்ற பக்தர்களுக்கு ஐயப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலர்கள் மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆட்சி வந்தபின் தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய பக்தர்களுக்கு உதவிபுரிவதற்காக கன்னியாகுமரி தேவஸ்தானத்தில் இருந்து இரண்டு அலுவலர்கள் 62 நாட்களும் சபரிமலையில் இருந்து தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். தேவஸ்தானம் வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டிலிருந்து ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பி விடப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு கடும்குளிர் காலத்திலும் காவல் புரிபவர்களுக்கு தேவைப்படும் வகையில் தண்ணீர் சூடாக இருப்பதற்கு பிளாஸ்க் கேட்டிருந்தார்கள் அதுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை வைகுண்ட ஏகாதசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
பெரியார் பற்றிய சீமான் கருத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்ததுள்ளார். என்ற கேள்விக்கு, “அண்ணாமலைக்கு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அவர் எப்போது அந்த சாட்டையால் அடித்துக் கொண்டாரோ அன்றைய தினமே அவரது அரசியல் ஞான சூனியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.
பெரியாரை யாரெல்லாம் இழிவு படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் தமிழக அரசியலில் எடுபட மாட்டார்கள். தமிழகத்தின் விடிவெள்ளியாக பகுத்தறிவு வெளிச்சத்தை உண்டாக்கி தந்தவர் பெரியார். அவரைப்பற்றி அறியாதவர் கூறுகின்ற கருத்தை நாம் ஒரு கருத்தாகவே பொருட்படுத்த தேவையில்லை” எனத் தெரிவித்தார்.