தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திடீர் விசிட் செய்த அமைச்சர் சேகர் பாபு

நிவேதா ஜெகராஜா

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு தற்போது திடீர் விசிட் அடித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2014 முதல் இந்நாள் வரை கோயிலின் கணக்கு வழக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என, தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு கோயில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் `இது நீதிமன்றத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எங்களை மிரட்டும் போக்கு’ என பொது தீட்சிதர்கள் இந்து சமய அறநிலை துறைக்கு நோட்டீஸ் அனுப்பினர். மீறி கோயிலை ஆய்வு செய்தால் நாங்கள் நீதிமன்றம் நாட வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. முதல்வர் முதல் ஜனாதிபதி வரை அனைவருக்கும் இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் தரப்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை தற்போது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு கனகசபை மீது ஏறி அமைச்சர் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அமைச்சரின் இந்த திடீர் விசிட், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தான் சாமி தரசனத்துக்காக மட்டுமே வந்ததாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லையென்றும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு எதிர்ப்பதால், ஆய்வு நடக்குமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.