திருப்பரங்குன்றம் விவகாரம்- அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு pt
தமிழ்நாடு

"2014-ம் ஆண்டு தீர்ப்பின்படி நடக்கிறோம்.. கார்த்திகை தீபத்தில் இந்துத்துவாக்கு வேலை இல்லை" - ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், ஏன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தோம் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்..

Rishan Vengai

கார்த்திகை தீபத் திருநாளான நேற்று, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்து முண்ணனி அமைப்பினர் கூட்டமாக திருப்பரங்குன்றத்திற்கு தீபம் ஏற்ற வந்தபோது காவல்துறையினாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து இந்து முண்ணனி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஏற்ப்பட்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், அந்தப்பகுதியில் 144 தடை உத்தரவை காவல்துறை அமல்ப்படுத்தப்படுத்தியது.

திருப்பரங்குன்றம் மலை

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு மத்திய படையுடன் மனுதாரர் வந்தபோதும் மேலே செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இந்த சூழலில் திருப்பரங்குன்றம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு செய்தது. அந்தமனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், இரு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. மேலும் இந்தப் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு சரியானதே எனவும், தமிழக அரசு ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் நீதிபதிகள் விமர்சித்தனர்..

நயினார் நாகேந்திரன் கைது..?

இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர் சீனிவாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தநிலையில், நீதிமன்றத்தில் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படாதது குறித்து மதுரை காவல் ஆணையர் விளக்கமளித்தார். தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்றே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். மேலும், 144 தடை உத்தரவையும் ரத்து செய்த அவர், மதுரை மாநகர காவல் ஆணையர் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இந்துத்துவா அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தீபம் ஏற்ற குவிந்த நிலையில், அனுமதி அளிக்க முடியாது, அரசு மேல்முறையீடு செல்ல உள்ளது என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர், நாயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர். 

அரசின் நிலைப்பாடு இதுதான் - அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது பேசுகையில், “கார்த்திகை தீபத் திருநாளில் சர்ச்சை ஒன்று தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மதவாத சக்திகள், இந்துத்துவா அமைப்புகள் எப்படியாவது தமிழகத்தில் காலை ஊன்றவேண்டும், அதை எந்தவழியிலாவது செய்துவிட வேண்டும் என இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றை மட்டும் தெளிவுபட சொல்லிக்கொள்கிறோம் கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் தமிழ்க்கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக்கூடிய பண்டிகையே தவிர, இந்தியாவில் இருக்கக்கூடிய இந்துக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகை அல்ல. உலகத் தமிழர்கள் கார்த்திகை திருவிழாவை கொண்டாடுவார்கள். இதில் இந்துத்துவாவிற்கு எந்த வேலையுமே கிடையாது..

ஆனால் திருப்பரங்குன்றத்தை ஒட்டி ஒரு பிரச்னையை கிளப்பியிருக்கிறார்கள், நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவையும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். 2014ஆம் ஆண்டு வழக்கப்படி எந்த இடத்தில் தீபத்தை ஏற்றிகொண்டிருக்கிறார்களோ அதே இடத்தில்தான் ஏற்றப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதைப்பற்றி தெரிந்துகொள்ளாதவர்கள், புதியதாக ஒரு விசயத்தை கண்டுபிடித்தது போல நீதிமன்றத்தை அணுகி கார்த்திகை தீபத்திற்கு விளக்கேற்ற வேண்டுமென கேட்டு இருக்கிறார்கள், அதற்கு நீதிபதியும் ஒரு உத்தரவை போட்டுள்ளார்.. தமிழக அரசும், முக ஸ்டாலின் அவர்களும் சட்டத்தை மதிப்பவர்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை கருத்தில் கொள்ளாமலும், அதன்மீதான மேல்முறையீடு இல்லாமலும் தனி நீதிபதியால் புதிய உத்தரவை பிறப்பிக்க முடியாது. அப்படியான தீர்ப்பிற்கு தமிழக அரசால் எப்படி அனுமதியளிக்க முடியும். அப்படி அனுமதியளித்தால் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழும். இதனால் இந்த விவகாரத்தில் நாங்கள் 2014 தீர்ப்பின்படியே நடந்துகொண்டிருக்கிறோம் என அமைச்சர் ரகுபதி கூறினார்..

நீதிமன்ற உத்தரவு பெற்றுவந்தபின்னரும் தமிழக அரசு தீபமேற்ற அனுமதி மறுக்கிறது என வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், 2014 தீர்ப்பின் உத்தரவை மதிக்காமல் நடந்துகொள்ளுபவர்களுக்கு எதிராக, முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. முந்தைய தீர்ப்பை மறைத்துவிட்டு புதிய உத்தரவை வாங்கிக்கொண்டு வந்தால் அதை ஏற்றுக்கொள்வதற்கு தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் அல்ல ஏமாளிகள் அல்ல. மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்கு இந்தியாவிலேயே எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான், அதைத்தான் நாம் இன்றைக்கும் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம் என பேசினார்..

தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, சட்ட வல்லுநர்களுடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் என்ற கேள்விக்கு, ‘2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பானது அதிமுகவினர் பெரிதும் மதிக்கக்கூடிய அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது தான் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு சரியில்லை என்றால் அவரே அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பாரே. அம்மையார் ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி தான் அறிவாளி என்று அதிமுகவினர் ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு பிரச்சனை இல்லை” என திமுக அமைச்சர்கள் பேசினர்.

அமைச்சர் ரகுபதி குறிப்பிட்ட 2014 தீர்ப்பின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது

IMG_2175.pdf
Preview