தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோட்டில், நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார். மேலும், அவர் திமுக-வை தீயசக்தி என்றும் தவெக-வை தூய சக்தி என்றும் கூறியது பேசுபொருளாகியிருந்தது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் இன்று, தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவெக தலைவர் விஜயின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், “நாங்கள் தீய சக்தியும் இல்லை, தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது.விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும்.
பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பாஜகவின் சி-டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது.
எம்ஜிஆர் 1972இல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று, அவர் பலத்தை காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோகிதை இருக்கிறது. ஆனால் விஜய் அந்த தேர்தலில் புறமிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டு கொள்ளவில்லை. எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது.
சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். அவர், ஐநூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்அபோல் நாங்கள் இல்லை. பாஜகவின் சீடீம் தான் விஜய்” எனத் தெரிவித்துள்ளார்.