மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் வேதாரண்யம், நாகை ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தற்போது அங்கு 100 முதல் 110 கி.மீட்டர் வரை காற்று வீசுவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கரையை கடந்த பின்னர் தான் புயலின் வேகம் குறையும். புயல் முழுமையாக கரையை கடப்பதற்கு 3 மணி நேரம் ஆகும் என அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “புயல் கரையை கடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் அல்லது உடைமைகள் சேதமடைந்தால் கூட, அதை எடுக்க முயற்சிப்பதாக மக்கள் வீட்டை வெளியே வரவேண்டாம். ஆடு, மாடுகளுக்கு தேவையான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 6 மாவட்டங்களிலே 438 முகாம்களில் 76,290 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தேவையான உணவுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு 24 மணி நேரத்திற்கும் தேவையான சிகிச்சை அளிக்க மருத்து முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாகை, வேதாரண்யம், காரைக்கால், திருவாரூர் ஆகிய இடங்களில் இருக்கும் மக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே வெளியே வாருங்கள். அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அர்ப்பணிபோடு பணியாற்றி வருகிறார்கள். மக்கள் மரத்திற்கு கீழே நிற்கக்கூடாது. பாதுகாப்பான கட்டடங்களில் மட்டுமே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.