தமிழ்நாடு

குற்றமில்லை என்பதை நிரூபிக்க முதல்வர் நெருப்பிலும் இறங்குவார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

webteam

கோடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் கூட இறங்குவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மேத்யூஸ் குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோடநாடு விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் கூட இறங்குவார்  என்று தெரிவித்தார். 

தனது தலைமைச்செயலக அறையில் ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக கூறப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், அறையில் துணை முதல்வர் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்? அவர் சாமிதான் கும்பிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மோடி ஆட்சியில் நிறை குறைகள் இருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று தெரிவித்தார்.