அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி pt web
தமிழ்நாடு

“பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வழக்கறிஞர்” - அமைச்சர் ரகுபதி ட்வீட்

Angeshwar G

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் துறையினரின் முதல்கட்ட தகவல் அறிக்கையில், ரவுடி வினோத் வீசிய பெட்ரோல் குண்டு அதிக சத்தத்துடன் எரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை

குண்டுவீசி விட்டு தப்பி ஓடும் சமயத்தில் பிடிப்பதற்காக விரட்டிய போது, ரவுடி வினோத், காவல் துறையினர் மீது மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் காவல்துறை எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான ரவுடி வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.