Minister Raghupathi
Minister Raghupathi pt desk
தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதன்முறையாக... பெண் சிறைவாசிகள் பணியாற்றும் வகையில் பெட்ரோல் பங்க்!

webteam

சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து, விடுதலைக்கு பின் அவர்களை சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக மாற்றுவதற்கும், அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுவதை தடுக்கவும் அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

drama

இதன் ஒரு பகுதியாக 'சிறைகளில் கலை' என்ற புதிய திட்டம் அமைந்துள்ளது. சிறைவாசிகளை சீர்திருத்தம் செய்யும் புதிய திட்டமான 'சிறைகளில் கலை'யின் (இத்திட்டம் சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுமென சொல்லப்படுகிறது) தொடக்க விழா சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

விரைவில் இந்த திட்டம் மற்ற மத்திய சிறைகளில் செயல்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. 'சிறைகளில் கலை' என்ற திட்டத்தில் டெல்லி தேசிய சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சுமனசா அறக்கட்டளை இணைந்து சிறைவாசிகளுக்கு ஆழ்நிலை தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற பயிற்சிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் சிறைவாசிகளுக்கு பயிற்சியுடன் 6 மாத கால பட்டய படிப்பும் சான்றிதழும் வழங்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jail

இதன் தொடக்க விழா, சுமனசா அறக்கட்டளை நிறுவனத்தின் நடனக்கலை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 700 சிறைவாசிகளின் மத்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அம்ரேஷ் புஜாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுவொருபுரம் இருக்க, இந்தியாவிலேயே பெண் சிறைவாசிகள் பணியாற்றும் வகையில் முதன்முறையாக சென்னை புழல் சிறை அருகே 1,170 சதுரடியில் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புழல் சிறை அருகே பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகளை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி சிறைவாசிகள் சிறைக்குள் இருந்தே தங்களது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் பணம் ஈட்ட பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சென்னை புழல் சிறையில் உள்ள பெண் கைதிகள் பணியாற்றும் வகையில் கட்டப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடையும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.