விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவந்த குழந்தை லியா லட்சுமி என்பவர், நேற்று (டிச 3) இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை வகுப்பறைக்கு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அவரது வகுப்பு ஆசிரியர் அவரை தேடிச் சென்றுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை அறிந்துள்ளனர். அங்கே ஆராய்ந்தபோது, குழந்தை உள்ளே விழுந்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் விக்கிரவாண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்டதற்காக பள்ளி ஆசிரியர், தாளாளர் உட்பட மூவர் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குழந்தையின் உடற்கூராய்வு இன்று காலை நிறைவடைந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து, குழந்தையின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் அமைச்சர் பொன்முடி. மேலும் முதல்வர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் குழந்தையின் குடும்பத்திடம் அமைச்சர் ஒப்படைத்தார்.