அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி pt web
தமிழ்நாடு

“மாண்புமிகு ஆளுநருக்கு...” - அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்

Angeshwar G

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிண்டிகேட் மீட்டிங்கை தலைமை செயலகம் நடத்தக்கூடாது, பல்கலைக்கழகம் தான் நடத்த வேண்டுமென ஆளுநர் சொல்கிறார். ஆனால் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், நாகப்பட்டினத்தில் இருக்கும் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என சொல்லியுள்ளார். மாண்புமிகு ஆளுநருக்கு... சிண்டிகேட் மற்றும் மற்றவற்றை பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா என யோசித்து பார்க்க வேண்டும்.

Ministerponmudi

நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடக்க வேண்டிய பட்டமளிப்பு விழா 07/07/2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆளுநரை பொறுத்தவரை அவர் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக சட்டம் உள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட இன்னும் சில பல்கலைக்கழகங்களில் இன்னும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாத சூழல் நிலவுகிறது. துணை வேந்தர்கள் நியமிப்பதற்கு கமிட்டி போட வேண்டும். பல்கலைக்கழக சட்டப்படி சிண்டிகேட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒருவர், அரசினால் நியமிக்கப்படுகிற ஒருவர், ஆளுநரின் உறுப்பினர் ஒருவர் என மூவரையும் நியமித்து நாங்கள் பட்டியலை அவருக்கு அனுப்பிவிட்டோம்.

அமைச்சர் பொன்முடி

ஆனால் ஆளுநர் ‘மூன்று பேர் கொண்ட குழு போதுமானது அல்ல. யுஜிசி உறுப்பினரையும் சேர்க்க வேண்டும்’ என்கிறார். அது சட்டத்தில் இல்லை. யுஜிசி உறுப்பினர் தான் போட வேண்டும் என்று சொன்னால் ஆளுநருக்கென்று ஒரு உறுப்பினர் இருக்கிறாரே அதில் யுஜிசி உறுப்பினரை போடலாமே. ஏன் அதை செய்யவில்லை? உறுப்பினர் எண்ணிக்கை மூன்றை நான்காக்கி அதன் மூலம் இவர் ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற தவறுகளை செய்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகம் தன்னிச்சையாக செயல்படவில்லை என்கிறார். பல்கலைக்கழகத்திற்கு அனைத்து விதமான அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கல்லூரிகளில் காலியாக இருந்த இடங்கள் அனைத்துக்கும் தற்காலிகமாக பணியாளர்கள் போடப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டிலே பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நானும் பல கூட்டங்களில் வலியுறுத்தி இருக்கிறேன்.

Governor RN Ravi

ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் இவ்வாறு செய்து வருகிறார். சில குறைகள் இருக்கலாம். அதற்கு என்னையோ, துறை செயலாளரையும் அழைத்து ஆளுநர் பேசுவதை விட்டு பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுப்பதன் அவசியம் என்ன? தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் இவருக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இது போன்று தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது. ஆளுநர் இங்கு என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

கல்வித்துறையைப் பொறுத்தவரை ஆளுநர் வேந்தர் தான். கல்வித்துறையில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் அவர் வேந்தர் போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் அவர் செய்வது உங்களுக்கு தெரியாததல்ல” என்றார்.