தமிழ்நாடு

உதவிய மக்களின் பட்டியலை ஸ்டாலின் வெளியிடத் தயாரா ? - மாஃபா பாண்டிய ராஜன் கேள்வி

webteam

14 லட்சம் மக்களுக்கு உதவியதாகக் கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் அதை இணையத்தில் வெளியிட முடியுமா என அமைச்சர் பாண்டிய ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ஆவடி சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன், அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வரும் நிலையில், சமூக விலகல் இல்லாமல் ‘ஒருங்கிணைவோம் வா’ எனக் கூறி கட்சியினரை ஒருங்கிணைத்து கொரோனா தொற்று பரவும் விதமாக திமுக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

அதிமுக செய்யும் பணிகளை வெளியிடத் தயார் எனவும், 14 லட்சம் மக்களுக்கு உதவியதாகக் கூறும் ஸ்டாலின் அதனை இணையத்தில் வெளியிட முடியுமா ? எனவும் சவால் விடுத்தார். டாஸ்மாக் கடைகள் மூட வேண்டுமெனக் கூறி வருவதாகவும், உண்மையில் மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 60 சதவீதம் திமுகவினருடையது என்றும் குறிப்பிட்டார். மதுபானக் கடைகளை மூடுவதை விடுத்து அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை மூடிவிடலாம் என்றும் தெரிவித்தார்.

அனைத்திற்கும் கேரளாவைச் சுட்டிக்காட்டும் ஸ்டாலின், அங்கு ஆளும்கட்சியும் - எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் பார்க்கவேண்டும் என்றார்