3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
1998ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தபோது, அரசுப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள மீது கல்வீசி தாக்கியும், தீ வைத்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஓசூர் போலீசார் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது சட்டப்பிரிவுகள் 147, 148, 332, 353, 435, 307 ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதால் சென்னைக்கு மாற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அந்த நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இன்று நீதிபதி சாந்தா தீர்ப்பளித்தார். அதில் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தும், மற்றவர்களை விடுவித்தும் உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அதற்குள் மேல்முறையீடு செய்ய நீதிபதி அவகாசம் அளித்தார்.
இது குறித்து பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார். பின்னர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலகிருஷ்ண ரெட்டியில் ராஜினாமாவை அடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் 21-ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.