அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி pt desk
தமிழ்நாடு

“மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் மதுபான விலை உயர்விற்கும் தொடர்பில்லை” - அமைச்சர் முத்துசாமி

webteam

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் மற்றும் மத்திய அரசு வழங்கும் தரச்சான்றுதலுக்காக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஃபைல்ஸ் பார்ட் 2 குறித்து பேசுகையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்களின் சொத்து பட்டியலை தமிழக ஆளுநரிடம் வழங்குகிறார். அதாவது அவர் வேலையை அவர் செய்கிறார். அவர் என்ன செய்கிறார் என்று நாங்கள் பார்த்தால் எங்கள் வேலை கெட்டுப்போய்விடும். எங்களுடைய வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

Annamalai | DMK | BJP

மகளிர் உரிமைத்தொகைக்கும் மதுபான விலை உயர்வுக்கும் தொடர்பா?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் மதுபான விலை உயர்விற்கும் சம்பந்தம் கிடையாது. மதுபான விலை உயர்வு தொடர்பாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து மதுவிற்கும் விலை உயர்த்தப்படவில்லை. எனவே இரண்டையும் தொடர்புப்படுத்துவது சரியாக இருக்காது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்...

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் பெரும்பகுதியான வேலை முடிந்து விட்டது. திட்டத்தின் தொடக்க பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்னை தீர்க்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் சோதனையோட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் தொடங்கப்படும் தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும்” என்றார்.