தமிழ்நாட்டில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இருந்தால் பரிசீலனை செய்வோம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. முறையால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல்-டீசல் மற்றும் கலால் வரியால் மட்டுமே அதிக அளவு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் இருக்க வேண்டும்.
ஏற்கனவே அரசுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை உள்ளது. அப்படி இருந்தும் கூட உள்ளாட்சித் துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் செய்து வருகிறார். எனவே படிப்படியாக நிதி நெருக்கடிகளை சமாளித்து பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கி வருகிறார்.
பல ஜவுளிக்கடைகளில் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆய்வுப் பணி இன்று அல்லது நாளை முடிவடையும். பல்வேறு ஜவுளி நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து வருகிறது. பொதுமக்களிடம் வாங்கும் வரியை அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும். பல நிறுவனங்கள் பொதுமக்களிடம் வாங்கும் வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றி கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 103 இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. இந்த செயல் தொடர்ந்தால் அவர்களது உரிமத்தை ரத்து செய்ய ஆலோசித்து வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் அதுதொடர்பான விபரம் தெரிவிக்கப்படும்.
வணிக வரித்துறையில் அலுவலர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி வருவாயில் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் வழங்குகிறார்கள்., சில பொருள்களுக்கு வரி வசூலித்துவிட்டு அதை செலுத்துவதில்லை. இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக தலைமையிலான அரசு கடந்த நான்கு மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் கூறியதுபோல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும்'' என்று அவர் கூறினார்.