Aavin
Aavin pt desk
தமிழ்நாடு

சென்னை: பால் கிடைப்பதில் நீடிக்கும் சிக்கல் - தனியார் நிறுவனங்களுடன் அமைச்சர் ஆலோசனை!

webteam

சென்னையில் மழை வெள்ளத்தால் ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை நேற்று பெரும்பாலான இடங்களில் தடைபட்டது. இன்றும் அதேநிலை நீடிக்கிறது. பால் வாகனங்கள் வெள்ளத்தில் வர முடியாததால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

சைதாப்பேட்டையின் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பால் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தனியார் பாலும் கிடைக்காததால் பொதுமக்கள் ஆவினையே நாடி வருவதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனியார் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்தாலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன் X தளத்தில், “சென்னையில் பால் விநியோகத்தில் ஆவின் பெரும்பங்கு வகித்தாலும், ஒட்டுமொத்த பால் விநியோகத்தில் பிற நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளது.

வெள்ளம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் பால் விநியோகம் சவாலாக இருப்பதால், அதை சீர்படுத்த, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியபடி தனியார் நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்தாலோசனை நடைபெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சர், “இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது. எனவே, #NoPanicBuying அதாவது பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.