சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மாணவி அளித்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்தது.
அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறை மற்றும் 90,000 ரூபாய் அபராதம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகும் சர்ச்சை ஓயவில்லை. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எஃப்.ஐ.ஆர் கசிய விடப்பட்டது. அதன்பிறகு நாங்கள் அறப்போராட்டம் நடத்தினோம். நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. 5 மாதங்கள் கழித்து தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அன்று கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து ஞானசேகரன் வெளியே வந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோட்டூர் சண்முகம் ஆகியோருடன் அடுத்தடுத்து பேசியுள்ளார். எனவே இந்த வழக்கில் அமைச்சரை விசாரிக்காதது ஏன்? திமுக தலைவர்களுக்கு ஏன் பதற்றம்? என்று பரபரப்பான கேள்வியை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்,
“ குற்றவாளி ஞானசேகரனுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது; இதுவரை ஒரு முறை கூட ஞானசேகரன் என்னுடன் தொலைபேசியில் பேசியது கிடையாது. மழை வெள்ள காலத்தில், ஞானசேகரன் வீட்டு வாசலில் வட்டச் செயலர் சண்முகம் சிற்றுண்டி தந்தார்; சிற்றுண்டி சாப்பிடும்போது, ஞானசேகரன் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் . இதைத் தவிர, ஞானசேகரனுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது .” என்று தெரிவித்துள்ளார்.