ma subramanian
ma subramanian pt desk
தமிழ்நாடு

“ஹிஜாப் அணிந்து மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் தகராறு செய்த குற்றவாளிகள் கைது” - மா.சுப்பிரமணியன்

webteam

சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள டூமிங் குப்பத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ‘வருமுன் காப்போம்’ என்ற முகாம்கள் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற பெயருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவை ஒவ்வொரு ஒன்றியத்திலும் மூன்று இடங்களிலும், மாநகராட்சிகளில் நான்கு இடங்களிலும் என மொத்தம் 1550 இடங்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதைக் காட்டிலும் கூடுதலாக முகாம்கள் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொருத்தவரை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து குடிசைப் பகுதிகளை மையமாக வைத்து மருத்துவ முகாம்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு வாரமும் சென்னையின் பிரதான குடிசைப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இசிஜி முழு ரத்த பரிசோதனை, தொழுநோய் கண்டறிதல், காசநோய் கண்டறிதல், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இந்த குடிசைப் பகுதி மருத்துவ முகாமில் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இடங்களிலும் 40 மருத்துவர்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம் என பல்வேறு வகையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகின்றனர்

மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1 கோடியே 40 லட்சம் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகளை குறை சொல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. தேர்தல் வரப்போகிற காலகட்டம் என்பதால் ஒன்றிய அரசு சில ஆணையங்களை பயன்படுத்தி மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக எந்த செயலை செய்தாலும், அது அவர்களுக்கே பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் புதிய நோய்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் தான் மாநில அளவில் மரபணு பரிசோதனை கூடம் 4 கோடி ரூபாய் செலவில் அமைத்து வைத்திருக்கிறோம். எந்த ஒரு மாற்றமாக இருந்தாலும் நமக்கு உடனடியாக வைரஸ்களை கண்டறிந்து, புதிய வைரஸின் தாக்கம் எது வந்தாலும் அதை திறனுடன் சமாளிப்பதற்கு மருத்துவத்துறை தயாராக உள்ளது.

CM Stalin

ஹிஜாப் அணிந்து மருத்துவம் பார்த்த பெண் மருத்துவரிடம் தகராறு செய்த குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.