தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டம் web
தமிழ்நாடு

’செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பணி நிரந்தரம் மற்றும் தொகுப்பூதிய செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Rishan Vengai

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் 5ஆவது நாளாக நீடிக்க, அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலிக்க உறுதியளித்துள்ளார். 723 காலிப்பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை முடிவில் செவிலியர்கள் சங்கம் போராட்ட முடிவை அறிவிக்கவுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் போராட்டம் 4 நாட்களை கடந்து 5ஆவது நாளாக இன்றும் தொடங்கியது. இந்தசூழலில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நடந்துமுடிந்துள்ள பேச்சுவார்த்தையின் படி, பணி நிரந்தம் உள்ளிட்ட செவிலியர்களின் 10 அம்ச கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் எனவும், 723 காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணி வழங்கப்படும் என்றும், தொடர்ந்து படிப்படியாக காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றும் அமைச்சர் உத்திரவாதம் அளித்ததாக தெரிகிறது.

மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் வைத்த சம்பளத்துடன் கூடிய 1 வருட மக்ப்பேறு விடுப்பு குறித்து பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்தபிறகு செவிலியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து போராட்டம் சார்ந்த முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.