அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொறியியல் கலந்தாய்வு இருக்கும் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. மற்ற மாநிலங்கள் நுழைவுத்தேர்வை பின்பற்றினால் நாமும் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் எனக்கூறிய அவர், மருத்துவப் படிப்புகளைப்போல பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார். பொறியியல் படிப்பில் சேர்வதற்கும் நீட் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டால் மருத்துவத்துறையில் ஒதுக்கப்பட்டது போல மிகக்குறைவான சீட்டுகளே தமிழர்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.