தமிழ்நாடு

”உதயநிதி என்ன.. அவர் மகன் வந்தாலும் ஆதரிப்போம்” - அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு!

JananiGovindhan

திமுகவினர் எப்போதும் கருணாநிதி குடும்பத்திற்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பவர்கள். உதயநிதிக்கு மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம் என்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியிருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், திமுகவில் வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல கருணாநிதியின் குடும்பத்திற்கு திமுகவினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். அதன் அடிப்படையில் உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

நன்றியோடு இருப்பவர்கள் திமுகவினர். மேலும் உதயநிதி அமைச்சரானால் தேனாறும், பாலாறும் ஓடுமா என்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தேனும், பாலும் ஓடியதா? என்றார். அதிமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர் நேரு, ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தமிழகத்தை 5.75 கோடி ரூபாய் கடன் சுமையில் விட்டுவிட்டு சென்று நெருக்கடியான சூழலில் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிதி சுமையில் விட்டுச் சென்ற பழனிசாமி தற்போது திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விலைவாசியை உயர்த்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டுவதாக நேரு தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் 230 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி உள்ளதாகவும் ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கேள்வி அனுப்பிய அமைச்சர் நேரு 110 விதியின் கீழ் அதிமுக அறிவித்த திட்டங்களில் வெறும் 143 திட்டங்கள் மட்டுமே நடைமுறைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.