அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் PT
தமிழ்நாடு

”தமிழக பயணிகள் 5 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

Jayashree A

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 5 தமிழர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தற்போது வரை யாரும் தங்களது உறவினர்களை காணவில்லை என்கிற புகாரை தமிழ்நாடு கட்டுப்பாட்டு மையத்திற்கோ ரயில்வே துறைக்கோ அளிக்கவில்லை. அதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வரும் நிலையில் மையத்தின் செயல்பாடுகளை கண்காணித்த வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “இன்று காலை 4.20 மணி அளவில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை தந்தனர்.

வந்து இருந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில் மருத்துவ துறை சார்பாக 10க்கும் மேற்ப்பட்ட அவசர ஊர்தி, வீல் சேர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் சென்று அவர்களை வரவேற்கிறோம். அப்போது அதில் 4 நபர்கள் மட்டுமே காயம் அடைந்திருந்தனர். அவர்களை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தோம் சிகிச்சை பெற்ற பின் மூன்று நபர்கள் வீடு திரும்பி விட்டனர். அதில் ஒருவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்தார்.

மேலும், ”இந்த விபத்திற்காக மருத்துவத் துறை சார்பில் தமிழ்நாட்டில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த விபத்தில் 275 பேர் மரணம் அடைந்துள்ளனர். இறந்தவர்களின் 70 அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அதில் தமிழர்கள் யாரும் இல்லை.

தற்போது வரை ரயிலில் பயணம் செய்த தமிழர்களை தொடர்பு கொண்டு அவர்களின் நிலை பற்றி விசாரணை செய்து வருகிறோம். அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகிறோம் அதில் 5 நபர்கள் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தற்போது வரை யாரும் எங்களது உறவினர்களை காணவில்லை என்கிற புகாரை ரயில்வே துறைக்கு அளிக்கவில்லை. அதனால் தமிழகத்தை சேர்ந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது.

சிறப்பு ரயிலானது ஒடிசாவில் இருந்து இன்று ஒரு மணிக்கு புறப்பட்டு நாளை தமிழகத்தை வந்தடையும்” என்று தெரிவித்தார்.