நடிகை ஜோதிகா கருத்து தொடர்பான பிரச்னை விளம்பரத்துக்கு தான் உதவும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், வானரமுட்டி, கழுகுமலை, செட்டிகுறிச்சி, கயத்தார், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 1300க்கும் மேற்பட்டோருக்கு அரசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார். உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா தொற்று உள்ளது. 2ம் உலகை போரை விட பாதிப்பு அதிகம். அரசியலாக, மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசும் பழக்கம் உடையவர். அவர் மக்களை பால்கனியிலிருந்து பார்க்கிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
நடிகை ஜோதிகா பேச்சு தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து தற்போது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. கொரோனா உலகளாவிய பிரச்சினையாக இருக்கும் போது இவர்களுடைய (ஜோதிகா) கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும்” என்றார்.