தமிழ்நாடு

“எனக்கும்தான் சீட் தரவில்லை; நான் அழுதேனா?” - மைத்ரேயன் குறித்து ஜெயக்குமார்

webteam

எனக்கும்தான் சீட் தரவில்லை, நான் அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவையில் உரை நிகழ்த்தி விடைபெற்றனர். அப்போது பேசிய மைத்ரேயன், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், “அதிமுக இரட்டை தலைமையில் சாதக பாதகங்கள் உள்ளன. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நல்ல முறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்தேன். அதுவும் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.  

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அரசியலில் ஏற்றத்தாழ்வு என்பது சகஜம்தான். முந்தைய காலங்களில் எனக்கும்தான் சீட் தராமல் மறுக்கப்பட்டுள்ளது. நான் அழுதேனா? வாய்ப்பு மறுக்கப்பட்டதற்காக முடங்கிவிடாமல் தொடர்ந்து கட்சிக்காக உழைத்தேன். வாய்ப்பை முதலில் மறுத்தாலும் என்னுடைய உழைப்பை பார்த்து ஜெயலலிதாவே மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். பதவி தரவில்லை என்பதற்காக கட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது” எனக் குறிபிட்டார்.