தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது ஈனச்செயல் : அமைச்சர் ஜெயக்குமார்

webteam

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனசெயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். இதனைத்தொடர்ந்து மர்ம ஆசாமிகள் அந்த பகுதிக்கு வந்து பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசி விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது போன்ற ஈனசெயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுபோன்ற ஈனச்செயல்களை அனுமதிக்க முடியாது. வன்முறைக்கு வன்முறை தீர்வு கிடையாது. இது ஜனநாயக நாடு. எந்த தலைவரின் சில அவமதிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம். இதில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.