கந்துவட்டி கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் உறவினர் அசோக்குமார், சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதும், அன்புச் செழியன் அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கந்துவட்டி குறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், கூடுதல் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், கந்துவட்டி புகார் தொடர்பாக காவல்நிலையங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை எப்போது வேண்டுமென்றாலும் புகார்களை அளிக்கலாம் என்றும், அது குறித்து மக்களுக்கு எவ்வித அச்சமும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.