யாகம் வளர்த்தால் ஒருவர் முதலமைச்சராகவிட முடியுமா ? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “சந்தர்ப்ப வாதம் என்று சொன்னால் அது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் தான் பொருந்தும். சென்னையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்துவிட்டு, கொல்கத்தாவிற்கு ஸ்டாலின் பம்மி விட்டார். ஏன் பம்மினார்? இதுதான் அவரது இரட்டை வேடம். யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதலமைச்சராக முடியுமா? ஒரு அலவலகத்தில் ஊதுபர்த்தி அல்லது கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்கு பெயர் யாகம் வளர்ப்பதா? இதையெல்லாம் உடனே திரித்து சொல்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின், நின்றால், உட்கார்ந்தால், நடந்தால் என அனைத்திற்கும் சிபிஐ விசாரணை கேப்டவர். தலைமை செயலகத்தில் ஊதுபர்த்தி கொளுத்தி புகை வந்ததற்கு கூட அவர் சிபிஐ விசாரணை கேட்பார் போல” என விமர்சித்தார். அத்துடன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவுகளை பிரதமர் நிறைவேற்றுவது நல்ல விஷயம் தான் என்றும், அவ்வாறு கூறிய மத்திய பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனின் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி பிரமாணத்தை மீறி யாகம் நடத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர். அதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், வீண் வதந்தி பரப்பிவருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தக் கேள்வியை ஜெயக்குமார் எழுப்பியுள்ளார்.