தமிழ்நாடு

“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு

“வெளிப்படையாக பேசும் அஜித்தை எனக்குப் பிடிக்கும்” - ஜெயக்குமார் பாராட்டு

webteam

நடிகர் ‌அஜித் குமார் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என வெளிப்படையாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தை பாராட்டியதோடு, அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் சாதனையை பரப்ப வேண்டும் என்றார். இது தமிழக அரசியலில் பூதகரமாக வெடித்தது. இந்நிலையில் தன் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை அறிந்த அஜித், திடீரென அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். 

அந்த அறிக்கை சமூக வலைத்தளங்கள்,தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என அனைத்திலும் நேற்று முதல் ட்ரெண்ட்டிங் ஆனது. படம் தொடர்பான சர்ச்சைகள், படத்தின் வெற்றி தோல்வி பேச்சுகள், படத்திற்கான விளம்பரங்கள் என எந்த ஒரு விஷயத்துக்கும் வாய் திறக்காத அஜித், தன் மீதும் தன் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுவதாக தெரிந்த கணமே அறிக்கை விட்டு பலரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அஜித்தின் அந்த அறிக்கை திரைத்துறையையும் தாண்டி பல விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அதிமுக முடுக்கிவிட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைக்கான தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதா‌கவும், கோடநாடு வீடியோ விவகாரத்தை வைத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள், அந்த எண்ணம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் அஜித்குமார் வெளிப்படையாக தெரிவித்தது பாராட்டுக்குரியது என்றும் நடிகர் அஜித் துணிச்சல்மிக்கவர்,தொழில்பக்தி மிக்கவர், அஜித் வெளிப்படையாக பேசுவது தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ‌கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் கூறினார்.