தமிழ்நாடு

“மீன்வளத்துறைக்கு இன்று பொன்னா‌ன நாள்” - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

2019ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என அறிவித்தார். 

மேலும் கால்நடை, மீன் வளர்ப்புத்துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அறிவிக்கப்படும் எனவும் மீன் வர்த்தகம் கடந்தாண்டில் மட்டும் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பை மீனவளத்துறை அளித்த வருவதாகவும் அவர் பட்ஜெட்டில் தெரிவித்தார். 

இந்நிலையில் 2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மீன்வளத்துறையின் பொன்னா‌ன நாள் இன்று. மீன்வளத்துறைக்கு தனி அமைச்ச‌கம் உருவாக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்கிறோம்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் இந்நாளை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.