Minister Durai murugan
Minister Durai murugan pt desk
தமிழ்நாடு

"துதி பாடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்" - எம்.எல்.ஏ.க்களிடம் கும்பிட்டு கேட்ட அமைச்சர் துரைமுருகன்!

Kaleel Rahman

சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன் "இந்த மன்றம் உயர்வானது. நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம்ம தொகுதியில் உள்ள 2.5 லட்சம் பேரில் நமக்குதான் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. இந்த மன்றத்தில் நீண்ட காலம் பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள் நானும் 50 ஆண்டுகளை கடந்து விட்டேன்.

எனக்கு ஒரேயொரு குறை உள்ளது. முதலமைச்சருக்கும் அந்த குறை உள்ளது. உறுப்பினர்கள் பேசும்போது வர்ணனையை விட்டுவிட்டு நேரடியாக சப்ஜெக்ட்-க்கு வாருங்கள். பாதி நேரத்தை வர்ணனையிலேயே செலவழித்து விடுகிறீர்கள். அதனால் யாராவது திருப்திபடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்த நேரத்தை வீணடித்து விட்டோமே என்று வருத்தம்தான் இருக்கும்.

முதல் முறை தேர்வாகி அவைக்கு வந்தவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லுவது வழக்கம். கட்சித் தலைவருக்கு நன்றி சொல்வது வழக்கம். அதிலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள். இவர்களுக்கு யார் தான் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பத்திரம் எழுதுபவர்கள் போல எவனோ ஒருவன் எழுதிக் கொடுக்கிறான். தயவு செய்து கையெடுத்து கும்பிடுகிறேன் மன்றத்தில் அவையெல்லாம் உகந்ததல்ல. இந்த மன்றத்தின் கண்ணியத்திற்கும் ஏற்புடையதல்ல.

என் தலைவன் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. மரியாதை உண்டு. உங்களுக்கும் உண்டு. அதனால்தான் அங்கங்கு கட்டுப்பட்டு உட்கார்ந்து இருக்கிறோம். எனவே வர்ணணையை விடுங்கள் முக்கிய பொருளை பேசுங்கள் என வலியுறுத்தினார்.